தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி பேசியதாக வழக்கு: கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்

Veeramani

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும் கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, முசிறியில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வது குறித்து பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. அதுபற்றி தேர்தல் கண்காணிப்புக் குழு அளித்த புகாரின்பேரில், முசிறி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி கே.என்.நேரு தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வீடியோவில் உள்ளதைப் போன்று ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் எவ்வித முகாந்திரமும் இன்றி கொலை மிரட்டல் பிரிவு பதியப்பட்டுள்ளதாகவும் கே.என்.நேரு தரப்பில் வாதிடப்பட்டது. வீடியோவில் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை, யாரையும் மிரட்டவில்லை என்பதையும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வரும் குற்றச்சாட்டுகள் தான் என குறிப்பிட்டு நேருவுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.