தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் 5-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

நீட் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் 5-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

webteam

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் அரசூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். திண்டுக்கல்லிலும் கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தினர். நாமக்கல் லத்துவாடியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கடலூர் மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்த காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சி.கே. பொறியியல் கல்லூரி மாணவர்களை வளாகத்திற்குள் வைத்து காவல்துறையினர் கேட்டை பூட்டினர். அதனையடுத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தின் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் காலை முதலே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், காவல் துறைக்கு கல்லூரி முதல்வர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து கல்லூரி முன்பாக சுமார் போலீஸ் குவிக்கப்பட்டது.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரியும் திருவாரூரில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு அருகேயுள்ள சாலையை மறித்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி, மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். நீட் தேர்வு மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை கலைத்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பள்ளி மாணவர்கள் முழங்கினர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கலை, அறிவியல் கல்லூரி, அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி மாணவர்கள், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியறுத்தியும், கல்லூரி வாயில்கள் முன்பு அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.