தமிழ்நாடு

'தமிழக ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பு இன்று சிறுபொறி; நாளை பெருந்தீ' - முரசொலியில் விமர்சனம்

webteam

தமிழகத்தில் ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பு இன்று சிறு பொறி; நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு யாரும் எந்த உத்தரவாதமும் தர இயலாது என முரசொலி பத்திரிகையில் கட்டுரை வெளியாகியுள்ளது.

இன்றைய முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில், ''தமிழ்நாட்டின் மேதகு ஆளுநர் ரவி தனது பதவிக்குரிய பொறுப்புணர்ந்து செயல்படுவதில் பல நேரங்களில் தடம் புரளுகின்றார். அவர் தேவையற்ற விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டு தனது ஆற்றலையும் அறிவையும் காட்டுவதாக எண்ணி தாறுமாறாக பேசி தமிழ் மக்களின் உணர்வோடு விளையாட தொடங்கியுள்ளார். எல்லைத்தாண்டி மூக்கை நுழைத்து நோட்டம் பார்க்கிறார்.

தமிழ்நாடு நீங்கள் ஆளுநராக இருந்த மற்ற மாநிலங்களை போன்றதல்ல. இது அரசியல் தெளிவு மிக்க மண். இதனை பல முறை கூறிவிட்டோம்.ஆளுநருக்கு இதில் சந்தேகம் இருந்தால் மாறுவேடத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி பயணம் செய்து பார்க்கலாம். அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் வாயை கொடுத்து பார்க்கட்டும்; அவர் ஆளுநருக்கு தெளிவான அரசியல் பாடம் நடத்திடும் அளவுக்கு அறிவாற்றல் பெற்றவர்.

திராவிட மாடல் என்றதுமே சில ஆரிய குஞ்சுகள் அலறித் துடிப்பது போல தமிழக ஆளுநரும் அது கண்டு மிரளுகிறார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் இப்போது கசிகிறது. ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகத்தில் பல திக்குகளிலும் உருவாகி வரும் எதிர்ப்புகள் சிறு பொறியாக இன்று தெரியக்கூடும்.

சிறுபொறிகள் தான் பல நேரங்களில் பெரும் தீயாக மாறிவிடுகிறது. இன்று அது போன்று ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகத்தில் உருவாகியுள்ள சிறு பொறிகள் நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு யாரும் எந்த உத்தரவாதமும் தர இயலாது. இதனை ஆளுநர் ரவி உணர வேண்டும். இது எச்சரிக்கை அல்ல நிலைமை விளக்கமே'' என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: ஆப்பசைத்து வாலை இழந்த குரங்கின் கதை தெரியுமா?- தமிழிசை பேச்சுக்கு முரசொலியில் பதிலடி