raids in KN Nehru house  ANI
தமிழ்நாடு

முதலில் EV வேலு, தற்போது KN நேரு | திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு குறி : காலையிலேயே பெரும் பரபரப்பு!

திமுகவின் முன்னாள் அமைச்சரை குறிவைத்து காலையில் இருந்தே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Praveen Joshva L

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு பிறகு முன்னாள் திமுக அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனைகள் நடக்கின்றன.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதன் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் திமுக ஆட்சிக் காலக்கட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு வீட்டில் கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ரூபாய் 3.23 கோடி நிதி முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், ஒப்பந்ததாரரிடம் இருந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு, அரசு பொதுப்பணத்தை முறைகேடு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் 9 அரசு அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

EV VELU

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரின் இடங்கள் என மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மது விலக்குத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவருக்கு சொந்தமான 41 இடங்களில் இடத்திலும் சோதனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு சொந்தமான அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், RA புரம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காலையில் இருந்தே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

விசாரணையின் முடிவில் முழு விவரங்கள் வெளியாகும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.