தமிழ்நாடு

அரசுப் பேருந்தை இயக்கிய அந்தியூர் எம்.எல்.ஏ

அரசுப் பேருந்தை இயக்கிய அந்தியூர் எம்.எல்.ஏ

rajakannan

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்தியூர் எம்.எல்.ஏ. களத்தில் இறங்கி பேருந்தை இயக்கினார்.

அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது. போக்‌குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

50 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துகள் பனிமனைகளிலேயே நிற்கின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்துகள் பெருவாரியாக இயக்கப்படவில்லை. அந்தியூர் மலைப்பகுதி என்பதால் ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கருத்தில் கொண்டு அந்தியூர் எம்.எல்.ஏ ராஜா கிருஷ்ணன் தானாக முன் வந்து பேருந்து இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை சர்பார்த்த பின்னரே அவர் பணியாற்ற தொடங்கியதாக கூறப்படுகிறது. 

முதலில் அந்தியூர் பனிமனையில் இருந்து மக்களை ஏற்றிக் கொண்டு பேருந்தினை இயக்கிய அவர், முதற்கட்டமாக பவானிவரை சென்று திரும்பினார். தொடர்ந்து பேருந்து இயக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் 8-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு வரை  பேருந்தினை இயக்கப்போவதாக அவர் புதிய தலைமுறைக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார். எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணனின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.