தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு

Veeramani

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் ஒருமாத பரோல் நிறைவடைந்து அவர் புழல் சிறைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில், அவரின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 28 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து ஒருமாதகால பரோலில் விடுவிக்கப்பட்டு, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்.

முன்னதாக சிறைகளில் பரவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்கவேண்டும் என அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். அதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு மே 28 ஆம் தேதி முதல் ஒரு மாதகாலம் பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

சிறைகளில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதாலும், தனது மகன் பேரறிவாளனுக்கு ஏற்கனவே பல்வேறு உடல்நல பாதிப்புகள் இருப்பதாலும், அவரின் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை மீது அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், பேரறிவாளன் பரோல் முடிந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் தற்போது பரோல் நீட்டிப்பு அறிவிப்பு வந்துள்ளதால், பேரறிவாளன் மீண்டும் அவரின் வீட்டுக்கு அழைத்துசெல்லப்படுகிறார்.