நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், காவேரி ஆர்.எஸ், அன்னை சத்தியா நகர், குமாரபாளையம், வெப்படை சுற்று பகுதிகளை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து அவர்களது வறுமைநிலையை பயன்படுத்தி கொள்ளும் கிட்னி விற்பனை கும்பல், அறுவை சிகிச்சை மூலம் கிட்னியை விற்பனை செய்து 10லட்சம் ரூபாய் வரை பெற்று தருவதாக கூறி தொழிலாளர்களை மூளை சலவை செய்துள்ளனர்.
பின்னர் ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, கொச்சின், பெங்களூரு போன்ற இடங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கிட்னியை விற்பனை செய்கின்றனர். ஆனால் பேசிய தொகையை தராமல் 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இடைத்தரகர்கள் வழங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து கிட்னி விற்பனை கும்பலை சேர்ந்த திமுக தலைமை பேச்சாளரான ஆனந்தன் என்பவர் தலைமறைவானார். அவர் மீது பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் சென்னை சுகாதாரத்துறை சட்டபிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான மருத்துவக்குழுவினர், இடைத்தரகர் ஆனந்தன் மூலம் கிட்னி விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இவ்விவகாரம் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தலைமறைவாக உள்ள ஆனந்தனை போல கிட்னி விற்பனையில் ஈடுபட்ட மற்றொரு இடைத்தரகர் தான் முருகன். பள்ளிபாளையம் மற்றும் ஈரோடு கருங்கல்பாளையம், பேருந்துநிலையம் சுற்று பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களிடம் முருகன் மூளை சலவை செய்து, அவர்களை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்து கிட்னியை விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்த பெயர் பட்டியல், சிகிச்சை பெற்றது, அறுவை சிகிச்சைக்கு அழைத்து சென்றவர்கள், பணம் கொடுக்கப்பட்டது குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது.
அதற்கு மேல் ஒருபடியாக இடைத்தரகர் முருகன், கிட்னி விற்பனை செய்வதற்கும் அழைத்துவருபவர்களுக்கு கமிஷனாக கொடுக்கும் தொகை குறித்து பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிட்னி விற்பனைக்காக அழைத்து செல்பவர்களின் ஆவணங்கள் அனைத்தும் போலியாக தயார் செய்யப்பட்டு, கிட்னி பெறுபவரின் உறவினர் என்றும் தானமாக பெறுவதாகவும் இடைத்தரகர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
நபர் ஒருவருக்கு 4 லட்சம் ரூபாய் வரை முருகன் கமிஷனாக பெற்ற நிலையில் பல கோடி ரூபாய் வரை அவர் இதில் சம்பாதித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிட்னி விற்பனை விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டாலே இவ்வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.