ராகுல் - ஸ்டாலின் web
தமிழ்நாடு

திமுக கூட்டணி | கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்.. யார் யார் எங்கே?

திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Premkumar S

தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக, 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேசமயம், கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகள் உட்பட 175 இடங்களில் உதய சூரியன் சின்னத்தில் களம் காண்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆளும் திமுக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த தொகுதிப்பங்கீடு நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஒரு வழியாக முடிந்திருக்கும் நிலையில், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. அதன்படி, காங்கிரசுக்கு 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், சிபிஎம், சிபிஐ-க்கு தலா 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேக, மமக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், எஸ்டிபிஐ, மஜக, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திருமாவளவன் - ஸ்டாலின்

இதன்மூலம், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக, 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேசமயம், கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகள் உட்பட 175 இடங்களில் உதய சூரியன் சின்னத்தில் களம் காண்கின்றன. முன்னதாக 169 இடங்களில் போட்டியிடும் அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 27) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பிரிப்பதில் ஏற்பட்ட இழுபறியின் காரணமாக திமுக போட்டியிடவுள்ள தொகுதிகளை நேற்று அறிவிக்கவில்லை. இந்த சூழலில்தான், திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு காட்டுமன்னார் கோவில், திருப்போரூர், செய்யூர், பெரியகுளம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, அரக்கோணம், திண்டிவனம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பொன்னேரி, திருபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை,காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்

இந்திய மார்க்சிஸ்ட் கட்சிக்கு கீழ்வேளூர் (தனி), கந்தர்வக்கோட்டை (தனி), பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தளி. திருத்துறைப்பூண்டி (தனி), திருவில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி) ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம் (தனி), சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மைலம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி தொகுதியும், மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்) நாகப்பட்டினம் மற்றும் மணப்பாறை தொகுதியும், முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)

கட்சிக்கு சிவகங்கை தொகுதியும், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு (உதயசூரியன்) சிதம்பரம் தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு (உதயசூரியன்) நன்னிலம் தொகுதியும், தமிழர் தேசம் கட்சிக்கு (உதயசூரியன்) நத்தம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.