முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை, காவல்துறையிலிருந்து விலகி அரசியலில் இணைந்தார். ஆகஸ்ட் 2020 பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த அவர், ஆகஸ்ட் 2020 – ஜூலை 2021 இடைவெளியில் தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக பதவிவகித்தார். பின்னர் ஜூலை 2021 – ஏப்ரல் 2025 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருடைய தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட்ட பாஜக, 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகினார். அதற்கு பிறகு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு, அதிமுகவுடன் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்தும்கூட பாஜகவால் 3 சதவீதம் வாக்குகளை மட்டுமே பாஜகவால் பெற முடிந்தது. பாஜகவின் வாக்குவங்கி முன்பிருந்ததை விட சுருங்கியது.
இதையடுத்து, தமிழக அரசியலில் இளைஞர்களால் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், பாஜகவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அண்ணாமலை கருதுவதாகவும், அதனாலே துடிப்பான அரசியலை சுதந்திரமாக முன்னெடுக்க தனிக்கட்சி தொடங்குவதே வழி என திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தசூழலில், தான் நேற்று டெல்லி சென்ற அண்ணாமலை இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி அழைக்கப்பட்ட நிலையில், தற்போது, அவர் டெல்லி சென்றிருக்கிறார். இந்தசூழலில் தான், அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்க மறுத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக தலைமை அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், நாளை நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்து பாஜக தேசிய தலைமை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணாமலை தனது முடிவில் இருக்கிறாரா? அல்லது பாஜக தலைமையால் சமாதானம் செய்யப்படுவாரா? என நாளை தெரிய வரும் என எதிர்பார்க்கபடுகிறது.