senthil balaji, annamalai pt web
தமிழ்நாடு

“இப்போதுதான் சிறையில் இருந்து வந்தார்.. அதற்குள்..” - செந்தில்பாலாஜியை விமர்சித்த அண்ணாமலை!

"டாஸ்மாக் துறையின் அமைச்சர் தற்போதுதான் சிறைக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்தார். வந்தபிறகு மீண்டும் இப்படி நடக்கிறது" - அண்ணாமலை

PT WEB

டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

அமலாக்கத்துறையின் அறிக்கையில், “திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளி விபரங்களை உயர்த்தியும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பார் உரிமங்கள் வழங்குவதிலும், அதற்கான ஒப்பந்தங்களிலும் தவறிழைக்கப்பட்டுள்ளது. ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ. 10-30 வரை அதிகமாக வசூலித்தது தொடர்பான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. மதுபான ஆலைகள் - டாஸ்மாக் அதிகாரிகள் இடையே நேரடி தகவல் தொடர்ந்து இருந்துள்ளது” என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அமலாக்கத்துறையின் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “நாங்கள் சில நாட்களாகவே யூகித்தோம். நாங்கள் யூகித்ததுதான் அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உள்ளது. ரூ.1000 கோடிக்கும் மேலாக கமிஷன் பெறப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், டெல்லியில் நடந்த மதுபான ஊழல்களை விடப் பெரிதாக சென்னை மதுபான ஊழல் இருக்கும் என்ற எண்ணம் உள்ளது.

இதையெல்லாம் மறைப்பதற்குத்தான் தமிழ்நாடு அரசு தொகுதி மறுசீரமைப்பு, ரூபாய் இலச்சினை மாற்றுவது என புதிதுபுதிதாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவருகிறது.

டாஸ்மாக் துறையின் அமைச்சர் தற்போதுதான் சிறைக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்தார். வந்தபிறகு மீண்டும் இப்படி நடக்கிறது. இதில் முதலமைச்சர் தமிழ்நாடு மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.