Annamalai pt web
தமிழ்நாடு

“விரதம் இருக்கப்போகிறோம்.. ஆண்டவனிடம் முறையிட போகிறோம்” அண்னாமலை சாட்டையடி போராட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து சாட்டையடி போராட்டத்தை கையில் எடுத்தார் அண்ணாமலை

Angeshwar G

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாகப் பேசினார்.

Annamalai

“நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் நீங்கள் கைது பண்ணுவீர்கள். நாளையில் இருந்து ஆர்ப்பாட்டம் அப்படி நடக்காது. ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டம் நடக்கும். நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே சாட்டையால் 6 முறை அடித்துக் கொள்ளப்போகிறேன். திமுக எனும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும்வரை நான் செருப்புப் போடப்போவதில்லை. நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே வந்த அண்ணாமலை தன்னைத்தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “நாங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் வரும் நாட்களில் இன்னும் தீவிரப்படுத்தக்கூடிய போராட்டம். தனிமனிதனைச் சார்ந்தோ அல்லது தனிமனிதனுக்கு ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் கோபத்தைக் காட்டவோ இந்த போராட்டம் கிடையாது. கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்திருக்கிறது. பொருளாதாரம் பின் தங்க ஆரம்பித்திருக்கிறது.

Annamalai

தமிழகத்தில் பெண்களின்மீது தாயார்களின்மீது தொடுக்கப்படக் கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகமாகிறது. தவ வேள்வியாக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

முருக பெருமானிடம் எங்கள் வேண்டுதலை 6 சாட்டை அடியாக சமர்பிக்கிறோம். விரதம் இருக்கப்போகிறோம். அரசியல் பணியை செய்யப்போகிறோம். ஆண்டவனிடம் முறையிடப்போகிறோம். கிடைக்கும் எல்லா மேடைகளிலும் திமுகவை தோலிருத்துக் காட்ட போகிறோம். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை அந்தக் காலணியை அணியப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.