தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதின் பின்னணியைப் பேசியிருக்கிறார் இந்துத்துவ சித்தாந்தியான குருமூர்த்தி. தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக வளர வேண்டும் என்ற முயற்சிக்கு ஒருவகையில் அண்ணாமலை தடையாக இருந்தார் என்றும் மிதமிஞ்சிய வேகத்தில் அண்ணாமலை செயல்பட்டதே அவருடைய நீக்கத்துக்கான காரணம் என்றும் கூறியிருக்கிறார் குருமூர்த்தி. திஃபெடரல் இணையதளத்தின் ஆசிரியர் சீனிவாசனுக்கு அளித்த பேட்டியில் மேலும் பல முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார் குருமூர்த்தி.
அவர் கூறுகையில், “தமிழகத்தில் நிறைய வேலைபார்க்க வேண்டியிருக்கிறது என்பதை பாஜக தலைமை உணர்ந்திருக்கிறது. அண்ணாமலை மிதமிஞ்சிய வேகத்தில் செயல்பட்டதும், அவரது நீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். அது அவர் தன்நலனுக்காக செய்திருந்தாலும் சரி, கட்சிநலனுக்காக செய்திருந்தாலும் சரி! எதுவாயினும் மெல்லத் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய சக்தியாக மாறிவிட வேண்டும் என்பதே செயல்திட்டம். மாநிலத் தலைவர் விஷயத்தில் கட்சித்தலைமை சரியான முடிவை எடுத்திருக்கிறது. அண்ணாமலையும் இதற்கு உடன்பட்டார் என்று நினைக்கிறேன். அவருக்கு அதிருப்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை. கட்சித் தலைமையின் உத்தியை அவர்புரிந்து கொண்டுள்ளார். 2026ஆம் ஆண்டு தேர்தல் பாஜகவின் இலக்கு அல்ல” எனத் தெரிவித்திருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தல் பாஜகவின் இலக்கு அல்ல என்று குருமூர்த்தி கூறியிருப்பது பெரும் யூகங்களை கிளப்பியிருக்கிறது. குருமூர்த்தியின் முழுமையான பேட்டியை தி ஃபெடரல் இணைய தளத்தில் பார்க்கலாம்.