தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2023ல் முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளதை சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று உறுதிப்படுத்தினார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அதிமுகவினர் கூறிய நிலையில் இப்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தக் கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் பதவிக்கு நேற்று விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, நயினார் நாகேந்திரன் மட்டுமே தாக்கல் செய்திருந்தார். தவிர, அவரைத் தலைவராகத் தேர்வு செய்ய 10 பேர் பரிந்துரைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர் பாஜக மாநிலத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தேர்வு குறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, “நான் இனி சுதந்திரமாகப் பேச ஆரம்பிப்பேன்; இனி அண்ணாமலையாக பேசுவேன். அடித்து ஆடக்கூடிய பாக்சிங் கலை எப்போதும் ஓர் அரசியல்வாதிக்கு தேவை. இனி, சிக்ஸ் அடிப்பது மட்டும்தான் என் வேலை; இனி நயினார் டிஃபன்ஸ் ஆடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவதற்கு அதிமுகவே காரணம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.