அண்ணாமலை pt desk
தமிழ்நாடு

திமுகவினர் மாய உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் கூட்டுக் களவாணிகள் ஒன்றாக சேர்ந்து, நம் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். ரவுடி வகுப்பு எடுத்தால், ரவுடி தான் கிடைப்பார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

PT WEB

செய்தியாளர்: லெனின்

திருச்சியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில்...

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்:

திமுக மேடைகளில் ஆபாச பேச்சுகளும் கைத்தட்டல்களும் காணப்படுகிறது அதைப் பார்த்து நாம் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என தமிழக முதல்வர் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திமுகவினர் கும்மிடிப்பூண்டியை தாண்டி இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கத் தயாராக இல்லை. வடமாநிலங்களில் இருக்கும் தலைவர்கள் யாரும், தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழர்களைப் பற்றியோ, தரக்குறைவாக பேசுவதில்லை.

cm stalin

திமுகவினர் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கின்றனர்:

அண்ணாவிற்குப் பிறகு திமுகவினர் ஒரு கூண்டுக்கிளி போல, வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். தேசிய கல்விக் கொள்கைக்கான முதல் கூட்டம் திருச்சியில் நடந்து வருகிறது. இதுபோல, திருநெல்வேலி, மதுரை, கோவை, சென்னை என இன்னும் எட்டு கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடக்க இருக்கிறது. நம் நாட்டில் 1968 ஆம் ஆண்டு முதல் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு, 1986 ஆம் ஆண்டு இரண்டாவது கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. கடந்த 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இரண்டாவது கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தாய்மொழிக் கற்றல் மூலமாக முன்னேறி இருக்கின்றனர்.

சரித்திரப் பதிவேடு குற்றவாளி சேகர்பாபு:

திமுக அமைச்சர்கள் படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை. உதயநிதி ஸ்டாலின் என்ன படித்தார்? எங்கு படித்தார்? என்பது யாருக்கும் தெரியாது. கல்வி அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, அகில உலக உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருக்கிறார். ரசிகர் மன்ற வேலை நேரம் போக எஞ்சிய நேரத்தில், கல்வித்துறையை கவனித்துக் கொள்கிறார். இவர்களுக்கெல்லாம் கல்வியைப் பற்றி என்ன தெரியும். சென்னையின் சரித்திர பதிவேடு குற்றவாளி சேகர்பாபு. இவர், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி இருப்பவர் சிறை மற்றும் நீதித்துறை அமைச்சராக இருக்கிறார்.

senthil balaji, annamalai

செந்தில்பாலாஜி 10 முதல் 15 ஆண்டுகள் சிறையில் இருப்பார்:

5 கட்சிகள் மாறி, ஒன்றறை ஆண்டுகள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி சாராய அமைச்சராக இருக்கிறார். இவர், இன்னும் 10 ஆண்டுகள் அல்லது 15 ஆண்டுகள் சிறையில் இருக்கப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. குண்டர் தடுப்பு காவல் சட்டத்திற்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தி அமைச்சராக இருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா? இந்த கூட்டுக் களவாணிகள் ஒன்றாக சேர்ந்து நம் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்கின்றனர். ரவுடி வகுப்பு எடுத்தால், ரவுடி தான் கிடைப்பான். நல்லாசிரியர் வகுப்பெடுத்தால், நல்ல ஆசிரியர் கிடைப்பார்.

நமது குழந்தைகள் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிப்பார்கள்:

கர்மவீரர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பிரதமர் நரேந்திர மோடி போன்றோர் கல்விக் கொள்கை பற்றி சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். உங்கள் குழந்தை தமிழ் மொழியில் தான், தாய் மொழியில் தான் படிப்பார்கள். இதை கடந்து இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிப்பார்கள். நம்முடைய குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை கிடைக்கச்செய்வது தான் தேசிய கல்விக் கொள்கை. மணச்சநல்லூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் கதிரவன், கலாநிதி வீராசாமி, கீதா ஜீவன், பிச்சாண்டி, ஏவா.வேலு, ஜெகத்ரட்சகன், மு.க.முத்து இப்படி திமுகவினர் அனைவரும் தனியார் பள்ளி நடத்தி அதில் மூன்று மொழிகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நபர்கள்தான் திமுகவில் எம்எல்ஏவாக இருக்கிறார்கள். தமிழநாடு வளராமல் இருப்பதற்கு இது தான் காரணம்.

Minister Sekarbabu

விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே தொகுதி மறு சீரமைப்பு நடக்கும்:

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு நல்லது என்று சிவக்குமார் கூறுகிறார். இது மிகப்பெரிய பொய். தொகுதி மறு சீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் நடக்காது. அது விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே நடக்கும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் வேறு வேலையில்லாமல் கூட்டம் போடுகிறார். இதில் வேலை இல்லாத மூன்று மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அண்ணாமலை பேசினார்.