மதுரையில் வண்டியூர் அருகே இந்து முன்னணி அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது, நிகழ்வில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் மற்றும் ஆதீனங்கள், சன்னியாசிகள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். “குன்றம் காக்க, குமரனை காக்க..." என்ற முழக்கத்தை முன்வைத்து திருப்பரங்குன்றம் கோயில் முகப்பு தோற்றத்தில் மாநாட்டு மேடையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக உரைகள், சிறப்புரைகளுடன் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டு திடலில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள், 20க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டன. 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டதோடு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டது.
மதுரையில் மாநாட்டில் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து மதம் இருக்கக் கூடாது என்பதற்காக பகல்காமில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்து மக்களிடம் ஒற்றுமை இல்லாததால் இந்து வாக்குகளை அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்டு மதத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
பள்ளிகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும், ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு முருக பக்தர்கள் மாநாடு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. முருகன் கோவில்களில் வழிபாட்டு விவகாரத்தில் தலையிட்டால் சூரசம்காரம் செய்து விடுவோம் என மாநாட்டு செய்தியாக சொல்கிறோம்.
120 நாடுகள் கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறது, 53 நாடுகள் இஸ்லாமியத்தை பின்பற்றுகிறது, 10 நாடுகள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவதில்லை, 2 நாடுகள் மட்டுமே இந்து மதத்தை பின்பற்றுகிறது, இந்து மதத்தை பாதுகாக்க இந்து மக்களிடம் எழுச்சி ஏற்பட வேண்டும்.
தமிழகத்தில் இந்துக்களுக்கும் இந்துக்களை சாராதவர்களுக்கும் தனித்தனி சட்டமாக உள்ளது, 2026 தேர்தலில் மக்கள் நிதி வேண்டாம், சாமி வேண்டும் என முடிவு செய்து விட்டார்கள், இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் தட்டி கேட்க வேண்டும், கோவில்களை இந்து அறநிலையத்துறை ஒழுக்கமாக நடத்தவில்லை, 2055 ஆம் ஆண்டில் உலகில் இஸ்லாமிய மக்கள் அதிகம் இருக்க கூடியதாக இருக்கும், இந்து இந்துவிலிருந்து ஒருவர் கூட மாற்று மதத்திற்கு மாறக்கூடாது. மாற்று மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
தமிழ் மொழியில் ஆன்மீகமும் அறிவியலும் கலந்துள்ளது, 5,400 ஆண்டுகள் பழமையான தமிழகத்தில் வாழ்க்கை முறை மாறாமல் தமிழர்களை அரசியல்வாதிகள் வாழ விட மாட்டார்கள், கோவில்களை சார்ந்து தமிழ் கலாச்சாரம் இருந்ததால் 5400 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது" என கூறினார்.