தமிழ்நாடு

"2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்" - கோவையில் அண்ணாமலை பேச்சு

Sinekadhara

2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான இலவச பசும்பால் வழங்கும் அமுதம் திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.

நிர்மலா சீதாராமன் இலவச பசும்பால் வழங்கும் அமுதம் திட்டத்தை துவக்கி வைத்து தாய்மார்களுக்கு பசும்பால் வழங்கினார். மேலும் பாஜக சார்பில் பெண்களுக்கான இலவச நாப்கின் வழங்கும் இதம் திட்டத்தையும் நிர்மலா சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் எனவும், அதற்கான முதல் விதை கோவை தெற்குத் தொகுதியில் போடப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் கோவை பாஜகவின் இரும்புக் கோட்டையாக மாறும் என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு சார்பில் பெண்கள் தேவை சார்ந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு சேவை செய்யவேண்டும் எனவும் கூறினார். சேவைக்கு பிரதமர் எங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கிறார் என்றும், கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏக்களை உருவாக்க அனைவரும் உதவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.