செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை அம்பத்தூரில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து விழா மேடையில் பேசிய அமைச்சரை எ.வ.வேலு, "மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு. தொடர்பாக தென் மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூட்டம் நடத்தி இருக்கிறார். இது சாதாரண விஷயம் அல்ல. இதைக் கண்டு டெல்லியில் உள்ளவர்கள் ஆடிப் போய் இருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்த போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அதன் பின் வாஜ்பாய் ஆகியோருடன் பேசி இரண்டு முறை தள்ளிவைக்கச் செய்தார்.
அதையே தற்போது முதலமைச்சர் முக.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். மற்ற அமைச்சர்களின் செயல் பாஜகவிற்கு அதன் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொல்லையாக இல்லை. ஆனால் ,அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகப் பணிகளை செய்து அவர்களின் செயலை தடுக்கும் விதமாக உள்ளார். அதனால் அமைச்சர் சேகர் பாபு மீது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கோபம் இருக்கிறது. எங்கு சென்றாலும் சேகர் பாபு பற்றிய அவர் பேசுகிறார். தூக்கத்தில் கூட அண்ணாமலை சேகர்பாபுவை தான் நினைக்கிறார்" என்று பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபுவிடம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என தமிழிசை கூறியதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் இருக்கிறாரா என்று விமர்சித்தபடி கேள்வி எழுப்பினார்.