நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், பரந்தூர் விமானநிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை சந்தித்த நிலையில், கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுகுறித்து பல்வேறு கட்சியினரும் தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்போம்...
திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் கூறுகையில், “விஜயை அங்கு வரை கொண்டு சென்று பொதுவான இடத்தில் பேச விடும் அரசு, இவரை ஊருக்குள் விட்டால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது. ஊருக்குள் இருந்திருந்தால் அரசியல் எழுச்சி ஏற்பட்டிருக்கும் என்றால் இந்த இடத்தில் இருந்தால் அரசியல் எழுச்சி ஏற்படாதா? இது சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுதான். திருமாவளவனில் இருந்து எத்தனையோ தலைவர்கள் போய் பார்த்திருக்கிறார்கள். எதாவது ஒரு இடத்தில்தான் அனுமதிக்க முடியும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் எங்களுக்கு அப்படித்தானே இருந்தது. கட்டுப்பாடுகள் எல்லாம் காவல்துறை கடைபிடிப்பதுதான். இந்த விமர்சனத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அதுமட்டுமின்றி, எத்தனையோ தலைவர்கள் பார்த்தபின்புதான் விஜய் சென்று பார்த்திருக்கிறார். இதனால் எங்களுக்கு நெருக்கடி வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன வாக்கியம் மிகமுக்கியமானது. விஜய் மக்களைச் சந்தித்துவிட்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனையை சொல்வாரேயானால் அதை இந்த அரசு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். அதேபோல், ஆக்கப்பூர்வமான யோசனையாக இருந்தால் ஏற்றுக்கொள்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “பரந்தூரில்தான் இந்த விமான நிலையம் வரவேண்டும் என்பதை எப்படி முடிவு செய்தார்கள். 2016ல் இருந்து இதுதொடர்பாக பேசி வந்தார்கள். 2019ல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசுக்கு இவர்கள் சில இடங்களை அனுப்பினார்கள். அதில் பரந்தூரும் ஒன்று. திமுக ஆட்சிக்கு வந்தபின் அதிமுக அனுப்பிய இடங்களில் ஒரு இடத்தினை மட்டும் மாற்றி அனுப்பி இருந்தார்கள். அதிலும் பரந்தூர் இருந்தது. இதனை அடுத்து மாநில அரசு கொடுத்த பட்டியலில் இருந்து இரு தேர்வுகளை மத்திய அரசு கொடுத்தது. அதிலும் பரந்தூர் இருந்தது. எனவே, பரந்தூரை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. மாநில அரசு கொடுத்த பட்டியலில்தான் பரந்தூர் இருந்தது. இன்று விஜய் அங்குபோகிறார். பிரச்னை இருக்கிறது என்கிறார், அப்படியானால், ஆக்கப்பூர்வமான யோசனை சொல்லவேண்டும். வேறு எதாவது இடத்தினை நீங்கள் தேர்வு செய்து வைத்துள்ளீர்களா? அதையும் விஜய் சொல்லவேண்டும்” எனத் தெரிவித்தார்.