செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து படிப்பாதையின் வழியாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்...
ஒரு வேள்வி எடுத்திருக்கின்றோம்:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறைய வேண்டும். காவல்துறையில் இருப்பவர்கள் தங்களது பணிகளை சரியாக செய்ய வேண்டும் என ஒரு வேள்வி எடுத்து இருக்கின்றோம். திமுக, ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணி அணிய மாட்டோம் என தெரிவித்திருந்தோம். இன்றோடு 48 நாட்களாகி ஒரு மண்டலம் முடிவு பெற்றுள்ளது. முதல் 48 நாள் பழனிக்கு வந்தது போல், அடுத்த 48 வது நாள் திருப்பரங்குன்றம் செல்ல உள்ளேன்.
முருக பக்தனாக அண்ணாமலையின் வேண்டுகோள்:
முருகன் கோயிலில் பக்தர்கள் காசுகளை கொட்டிக் கொடுக்கின்றார்கள். ஆனால், கழிப்பறை, குடிநீர் வசதி கிடையாது. அடுத்த ஆண்டுக்குள் போர்க்கால அடிப்படையில் அரசு இதை சரிசெய்ய வேண்டும். இது முருக பக்தனாக என்னுடைய வேண்டுகோள். பழனி மலை மட்டுமல்ல, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதி செய்ய வேண்டும்.
உள்ளூரில் இருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்லணும்னு தோணல:
பிரதமர் பிரான்ஸில் இருந்து தைப்பூச வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்கள். உள்ளூரில் இருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்லணும்னு தோணவில்லை. ஊழல் அமைச்சர் காந்தி, ஒரு அறிக்கைக்கு பதில் அறிக்கை தந்து வருகின்றனர். ஏசி ருமில் உட்கார்ந்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டு ஜெயித்து விடலாம் என்று நினைத்தால் அதற்கு மக்கள் பதில் தெரிவிப்பார்கள் என்றவரிடம், தவெகா தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்...
விஜய் தைப்பூச வாழ்த்து தெரிவித்தது பெரிய விசயமா?
எங்க வீட்டில் இருக்கும் அக்கா வாழ்த்து தெரிவித்தார்கள் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். விஜய் வாழ்த்து தெரிவித்தது பெரிசா.. வாழ்த்து தெரிவித்தது சந்தோசம். என்றவர் தொடர்ந்து... அதிமுக எடப்பாடி பற்றி நான் என்ன சொல்வது அவருடைய பிரச்னை உக்கட்சி பிரச்னை. இதுகுறித்து நான் கருத்து தெரிவித்தால் சரியாக இருக்காது...
அல்வா கொடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி மாறியுள்ளது:
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கைக்கு, பதில் அறிக்கை அளித்துள்ளேன். எல்லா மாநிலத்திற்கும் நிதி அளித்துள்ளார்கள். நம் மாநிலத்திற்கு கொடுத்த நிதியை திருப்பி விட்டார்கள் என தெரிவிப்பது பச்சை பொய். நிதி வேண்டுமா வாருங்கள் நானும் கூட வருகின்றேன். எதற்காக முதலமைச்சர் அவசர அவசரமாக திருநெல்வேலியில் போய் அல்வா சாப்பிட்டார் என்றால், கல்வி கடன் ரத்து, ,நிரந்தரப் பணி, விவசாய கடன் ரத்து என அல்வா கொடுத்தார். அல்வா கொடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி மாறியுள்ளது.
தவெக-வில் இருப்பவர்கள் எல்லாம் குழந்தைகள் தான்:
கஞ்சா கருப்பு அண்ணன் மிக நல்லவர். அவரையெல்லாம் கோபப்பட வைத்துள்ளார்கள். இந்த அளவுக்கு நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. தவெக-வில் குழந்தைகள் அணி அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்... 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது. ஒரு நண்பர் சொன்னார், தவெக-வில் இருப்பவர்கள் எல்லாம் குழந்தைகள் தான் என.
சேகர்பாபு கடந்த மூன்று வருடமாக ஒரே டயலாக்கை சொல்லி வருகிறார்:
சேகர் பாபு, சபரிமலைக்கு சென்றபோது, செகரட்டரி இடம் அழைத்துச் சொல்லி விட்டுச் செல்கின்றார். அப்படி சொல்பவருக்கு எப்படி சாதாரண பொது மக்களின் பிரச்னை தெரியும். முதலமைச்சர் துணைவியார் வருகிறார் என்றால் எவ்வளவு முன்னேற்பாடுகள் செய்கின்றார்கள். முதலமைச்சர் மட்டும் கட்டுப்படுத்தவில்லை என்றால், சேகர்பாபு யார் என்று காட்டிவிடுகின்ற டயலாக்கை கடந்த மூன்று வருடமாக ஒரே டயலாக்கை சொல்லி வருகின்றார். என்று அண்ணாமலை தெரிவித்தார்.