விஜய் -எ.வ. வேலு Pt web
தமிழ்நாடு

”எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை” - தவெக அரசுக்கு அண்ணாமலை வரவேற்பு!

திமுக ஆட்சி கால முறைகேடுகளை விசாரிக்கும் தற்போதைய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது; வழக்குகளை விரைவாக விசாரித்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Premkumar S

2021 முதல் 2026 வரையில் திமுக ஆட்சிக் காலக்கட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் எ.வ. வேலு. அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் இந்த நிறுவனத்துக்கு ரூபாய் 3.23 கோடி நிதி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரரிடம் இருந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு, அரசு பொதுப்பணத்தை முறைகேடு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் 9 அரசு அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எவ வேலு

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரின் இடங்கள் என மொத்தம் 20 இடங்களில் காலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், முறைகேடு தொடர்பான 13 ஆவணங்களும், கணக்கில் வராத 40 லட்சம் பணமும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இது தமிழக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை மட்டுமே எனவும் தான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நியமிப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தசூழலில் தான், திமுக ஆட்சி கால முறைகேடுகளை விசாரிக்கும் தற்போதைய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது; வழக்குகளை விரைவாக விசாரித்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெக அரசின் உத்தரவின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC), 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்த வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய வீடு மற்றும் பிற இடங்களில் நேற்று சோதனை நடத்தி, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தவெக. அரசு எடுத்துள்ள நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இந்த வழக்குகள் விரைவாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என மனப்பூர்வமாக நம்புகிறேன். அதேசமயம், BGR Energy ஊழல், ஊட்டச்சத்து கிட் (Nutrition Kit) ஊழல், பொங்கல் வேட்டி ஊழல் உள்ளிட்ட வகாரங்களும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.