அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டல் செய்வதை இவர் வாடிக்கையாக வைத்திருந்ததும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இக்குழுவினர் முதற்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று சம்பவம் நடந்த இடம் மற்றும் சிசிடிவி இருக்கக்கூடிய இடம் என அனைத்தையும் ஆய்வு செய்து விவரங்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பூட்டி இருக்கும் வீடுகளை தொடர்ச்சியாக நோட்டமிட்டு ஜீப்பில் சென்று கொள்ளையடிப்பதை ஞானசேகரன் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவர் மீது பள்ளிக்கரணை, அமைந்தகரை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து விசாரித்த போது காவல்துறையினருக்கு மற்றொரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
பள்ளிக்கரணையில் நடந்த கொள்ளை தொடர்பாக, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு ஞானசேகரனை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில்தான், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
ஞானசேகரன் தனிமையில் இருந்த ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுதையே வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஞானசேகரன் இரண்டு செல்போன்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ள நிலையில் அதில் கடந்த ஆறு மாத கால் ஹிஸ்டரியை காவல்துறையினர் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சைபர் ஆய்வகத்தில் ஞானசேகரனின் செல்போனைக் கொடுத்து அதிலிருந்து ஆபாச வீடியோக்களை காவல்துறையினர் ரெக்கவரி செய்திருக்கின்றனர். வாட்ஸ் அப் சாட்களையும் ஆய்வு செய்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "யார் அந்த சார்?" என்ற கேள்வி பரபரப்பாக எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்தால் சந்தேகங்கள் தீர்க்கப்படும் என்ற அடிப்படையில் கால் ஹிஸ்டரியை எடுப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஞானசேகரன் மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றவர்களுக்கு பகிரப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஞானசேகரன் கொள்ளையடித்த பணத்தில் பண்ணை வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.