அண்ணா பல்கலை. குற்றவாளிக்கு மாவுக்கட்டு புதிய தலைமுறை
தமிழ்நாடு

”இனி இப்படி நடக்கக் கூடாது” அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை.. எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு!

சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று ஒரு புறம் முழக்கமிருந்தாலும், அதே சமூகத்தால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்பொழுது, சமூகத்தில் ஒருவரான குற்றவாளிகள் சுலபமாக தப்பிப்பது எப்படி?

Jayashree A

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 23 ம் தேதி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சி தரப்பினரும், திமுகவிற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆளும் கட்சி தரப்பினரும் கூறிவரும் வேளையில், இச்சம்பவத்தை அரசியல் ஆக்காமல் குற்றவாளி தப்பிக்க முடியாதபடி கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும் என்பது சாமானியர்களின் கருத்தாக உள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று ஒரு புறம் முழக்கமிருந்தாலும், அதே சமூகத்தால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்பொழுது, சமூகத்தில் ஒருவரான குற்றவாளிகள் சுலபமாக தப்பிப்பது எப்படி? டெல்லியை உலுக்கிய மருத்துவர் வழக்கிலும் இதே நிலைதான் இன்று வரை நீட்டித்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அநீதிகளும் அதிகரித்து வரும் அதே வேளையில், சட்டங்களில் உள்ள ஓட்டைகளாலும் அரசியல் தலையீட்டாலும் குற்றவாளிகள் சுலபமாக தப்பித்து விடுகின்றனர்.

இந்நிலை இனியும் நீட்டிக்கக்கூடாது. இனியாவது இது போன்று ஒரு குற்றம் நிகழாமல் இருக்க அதிகபட்ச தண்டனையை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்பது சாமானியர்களின் கோரிக்கை.

நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அதிமுக அறிவித்து இருக்கிறது.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து பெண்கள் குழந்தைகள் வெளியில் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே, மாணவிக்கு எதிரான கொடூரம் நடந்ததைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல் குறித்து தான் பலமுறை சட்டமன்றத்திலும் அறிக்கை வாயிலாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆகையால், திமுக ஆட்சியைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும். முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

திருமாவளவன்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.