சென்னை காவல் ஆணையர் Vs அமைச்சர் கோவி. செழியன்.. இருவரும் தெரிவித்த 3 முரண்பட்ட தகவல்கள்! அதற்கு விளக்கமளித்த அமைச்சர் செழியன்:-
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் முரண்பட்ட தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். அதில் முக்கிய 3 முரண்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்..
முரண்பாடு - 1
மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக posh கமிட்டி புகார் அளித்ததாக காவல் ஆணையர் அருண் கூறியிருந்தார். ஆனால், மாணவி பாதிக்கப்பட்டது பற்றி posh கமிட்டிக்கு தகவலே தெரியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியிருக்கிறார்.
முரண்பாடு - 2
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரின் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறாரா? இல்லையா என்பதிலும் காவல் ஆணையரும், அமைச்சரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்தனர்.
ஞானசேகரனின் மனைவி அண்ணா பல்கலையில் வேலை செய்கிறாரா? என்ற கேள்விக்கு "அது போன்ற தகவல் எதுவும் இல்லை" என்று காவல் ஆணையர் பதில் அளித்தார்
ஞானசேகரன் மனைவி அண்ணாப் பல்கலைக் கழகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்கிறார். மனைவியை பார்க்க அவ்வப்போது வருவார் என கூறுகிறார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
முரண்பாடு - 3
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்தும் சென்னை பெருநகர காவல் ஆணையரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.
"அண்ணா பல்கலை. வளாகத்தில் 70 சிசிடிவி உள்ளது. 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கின்றன. 140 காவலர்கள் 3 பிரிவாக பணியில் இருக்கிறார்கள்" என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்து இருந்தார்.
“நுழைவாயில், விடுதி, உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தவறு நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லைதான். 10% கேமராக்கள் செயல்படாமல் இருந்திருக்கலாம்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.
”அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100-க்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் (POSH - Prevention of Sexual Harassment Committee) உள்விசாரணைக் குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களைச் சொல்லி புகார் அளித்திருந்தார்.
காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும்போதுதான், இந்தச் சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்தப் பிரச்சினைத் தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாகப் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி எடுத்துக்கொள்ளப்பட்டது.” என்று அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கார்.