அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை துன்புறுத்த கூடாது என சிறப்பு விசாரணை குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவி குறித்த எப்.ஐ.ஆர் காப்பி வெளியிடப்பட்டு நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் வழக்கு குறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விசாரணையை துவங்கிய சிறப்பு விசாரணை குழுவினர், எப்.ஐ.ஆர் வெளியான விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில், பத்திரிக்கையாளர்களின் செல்போன்களை பறித்ததுடன், எப்படி எப்.ஐ.ஆர் வெளியானது? என 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தி வந்தனர்.
சிறப்பு விசாரணை குழு பத்திரிக்கையாளர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த தடை விதிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி,கே.இளந்திரையன், சிறப்பு விசாரணை குழுவிடம், பத்திரிக்கையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தல் செய்ய கூடாது என உத்தரவிட்டார்.
மேலும், பத்திரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் உரிய சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு பத்திரிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.