அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரின் வீட்டில், நேற்று சுமார் 6.30 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். அதன் முடிவில் இரண்டு அட்டை பெட்டிகளில் ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், சொத்து ஆவணங்கள், பட்டாக்கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.
குறிப்பாக, ஞானசேகரின் இரண்டு மனைவிகளிடமும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள வீட்டை ஞானசேகரன் எப்போது வாங்கினார்? சொந்த ஊரான மதுராந்தகத்தில் ஞானசேகரன் எவ்வளவு சொத்துக்கள் குவித்துள்ளார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், ஞானசேகரன் மற்றும் அவரது இரண்டு மனைவிகளின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
மேலும், ஞானசேகரன் வைத்திருந்த ஜீப் மற்றும் குட்டியானை குறித்து விசாரணை மேற்கொண்ட போது, பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை செலுத்தாததால் அவர்கள் அவற்றை பறிமுதல் செய்துவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தற்போது கை மற்றும் கால் உடைந்திருப்பதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கஸ்டடிக்கு செல்ல முடியாத நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று ஞானசேகரனிடம் நேரில் சென்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஞானசேகரன் வீட்டை சோதனை செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஞானசேகரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து மீண்டும் ஞானசேகரனிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சமயத்தில் ஒரு நபர் தொடர்பு கொண்டதாக மாணவி முன்வைத்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரது இரண்டு செல்போன்களும் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதில் குறிப்பாக அந்த ஃபோன்-கால் இன்க்கமிங்-காலா அல்லது அவுட்கோயிங்-காலா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக பல்வேறு குற்ற வழக்குகளில் ஞானசேகரன் ஈடுபட்டு வருவதால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.