விவசாயிகள் பிரச்னைகளை முன்னிறுத்தி மார்ச் 23-ம் தேதி டெல்லியில் மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
தமிழக ஆறுகளின் வளம், மீட்பு உத்திகள் பற்றி திட்டமிடவும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் பற்றி ஆராயும் வகையிலும் தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் இன்று (ஞாயிறு) நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள அன்னா ஹசாரே மதுரை வந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன்மோகன் சிங் ஆட்சிக்கும், நரேந்திர மோடி ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என தெரிவித்தார். மேலும், லோக்பால் சட்டத்தை செயலற்ற முறையில் பிரதமர் மோடி வைத்துள்ளதாகவும், அதனை கண்டித்தும், விவசாயிகள் பிரச்னைகளை முன்னிறுத்தியும் மார்ச் 23-ம் தேதி டெல்லியில் மிகப்பெரும் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார். வைகை நதி மீட்பு நடவடிக்கைகளில் தமது பங்களிப்பும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.