நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு தமிழக அரசு தகுந்த ஆலோசனைகளை துரிதமாக வழங்கியிருந்தால் மாணவி அனிதாவின் தற்கொலையை தடுத்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கலந்தாய்வில் அனுமதிக்கக் கோரி உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்பட்டனவா? என்பதை தெரிந்துகொள்ள நீதிபதி கிருபாகரன் விசாரணை மேற்கொண்டார். அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராஜகோபால், நீதிமன்ற உத்தரவு இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை என்றும், கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், விசயத்தின் தீவிரத் தன்மையை அறிந்தும் ஏன் உடனடியாக நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி நீட் தேர்வு குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு அரசு விளக்கமளித்திருந்தால் அனிதாவின் தற்கொலையை தடுத்திருக்கலாம் என்றும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். கிருத்திகா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வரும் 15ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.