முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஜூன் 20-ம் தேதி திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.எ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், முதல்வர் விஜயை ஒருமையிலும், மற்றொரு நடிகையுடன் தொடர்புபடுத்தியும் பேசியிருந்தார். இதையடுத்து, முதல்வர் விஜயை அவதூறாக பேசியதாக, தவெக நகர செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
எனினும், முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 7 எம்.எல்.ஏ-வாக இருந்த ஒருவர் இப்படி பேசலாமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தது. இந்தசூழலில் தான், முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில், எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருக்கிறது.
இன்று காலை ஆத்தூர் பேரூராட்சி அலுவலத்திற்கு ஆய்வுக்குச் சென்றார். அப்போது, அங்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர். தொடர்ந்து, அவருடன் இருந்த அவரது ஆதரவாளர்கள் காவல்துறையின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தன்னுடைய வாகனத்திலேயே காவல்நிலையம் வர அனுமதிக்கேட்ட அவருக்கு அனுமதி மறுத்து காவல்துறை வாகனத்திலேயே அவரை,எஸ்.பி. அலுவலகம் அழைத்துச் சென்றுள்ளனர்.
திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.