தமிழ்நாடு

திருத்தணி: அங்கன்வாடியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 6 வயது மாணவன் காயம்

சங்கீதா

திருத்தணியில், அரசு அங்கன்வாடி பள்ளி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது மாணவன் விமல்ராஜ் தலையில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பூனி மாங்காடு காலனியில், அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 18 பெண் குழந்தைகளும், 17 ஆண் குழந்தைகளும், மொத்தம் 35 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இந்த அங்கன்வாடி பள்ளியில், சாந்தி என்ற ஆசிரியரும், சமையல் உதவியாளராக அம்முலு என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று மதிய உணவு வேளையின்போது, திடீரென அங்கன்வாடி பள்ளி மேற்கூரை சிமெண்ட் தளம் இடிந்து விழுந்து உள்ளது. அப்போது அங்கன்வாடியில் படுத்திருந்த விமல்ராஜ் என்ற 6 வயது சிறுவன், மேற்கூரை இடிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்துள்ளான். இதையடுத்து, பூனி மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதிய உணவு வேளை என்பதால், மற்ற மாணவர்கள் வெளியே சென்றிருந்தனர். இதனால் 18 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து திருவலாங்காடு வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கன்வாடி பள்ளி கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தால், அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.