வைரமுத்துவை மையப்படுத்திய பிரச்னைக்காக, தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன் மன்னிப்புக் கேட்டுள்ளதாக சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
தினமணி நாளிதழில் ஆண்டாள் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கட்டுரைக்கு பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. கட்டுரைக்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்தபோதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் சடகோப ராமானுஜ ஜீயர் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜீயர் கூறி வருகிறார்.
இந்நிலையில், தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் கோவிலுக்கு சென்று ஜீயரை சந்தித்துள்ளார். அப்போது, பிரச்சனைக்குத் தீர்வு காணுவது தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டாள் சந்நிதியில் வைத்தியநாதன் மன்னிப்புக் கோரியதாக ஜீயர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வைரமுத்து மன்னிப்புக் கோரும் வரை அறவழிப்போராட்டம் தொடரும் என்றும் ஜீயர் கூறியுள்ளார்.