தமிழ்நாடு

கீழடியில் வட்டச்சுவர் மற்றும் உறைகிணறு கண்டுபிடிப்பு 

webteam

5ம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு வட்டச்சுவர் மற்றும் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. 2014- 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் நாகரிகம்,கலாச்சாரம் குறித்த பல தகவல்கள் கிடைத்தன.

அந்தக்கால மனிதர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜுன் 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 25ம் தேதி பழங்கால குடியிருப்புகளில் உள்ள இரட்டை சுவர்கள் மற்றும் நேர் சுவர் கண்டறியப்பட்டது.

 தற்பொழுது மேலும் ஒரு வட்டச் சுவர், 5 அடி உயரம் கொண்ட உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியில் தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இவையெல்லாம் பழங்காலம் குறித்து அறிந்துகொள்ள உதவியாக இருக்குமென தொல்லியல் துறை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்