தமிழ்நாடு

பண்டைய காலத்து அரிய வகை பொருட்கள் சேகரிப்பு

பண்டைய காலத்து அரிய வகை பொருட்கள் சேகரிப்பு

webteam

நாகரிக மாற்றத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் பரிணாம வளர்ச்சி இன்று அசுர வேகத்தில் மாறிகொண்டிருந்தாலும், பண்டைய காலத்தில், சோழர்கள், ஜமீன் குடிமக்கள், பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களை இன்றும் பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்து வருகிறார்‌ கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர்‌.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் இன்று இயந்திரத்தனமாய், மின் சாதனங்களாய் மாறிவிட்டதால், பழங்கால பொருட்களை இன்றைய தலைமுறைகள் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.‌ இதுபோன்ற நிலையில், கும்பகோணம் அருகே உள்ள பாபுராஜபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பல்வேறு அரிய வகை பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறார். கையால் இயக்கப்படும் அரவை இயந்திரம், மரத்தால் ஆன அளக்கும் படி, சோழர்கள் பயன்படுத்திய வாள், பிரிட்டிஷாரின் இரவு நேர விளக்கு, மரத்தில் குடைந்து செய்யப்பட்ட பானை, ஜமீன் காலத்தில் பெண்கள் பயன்படுத்திய மேக்அப் செட், மரப்பாச்சி பொம்மைகள் என, 500க்கும் மேற்பட்ட பொருட்களை பாதுகாத்து வருகிறார்.

கணேசன் வைத்துள்ள பொருட்களிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கது மூன்று சாவிகள் கொண்ட சுமார் 10 கிலோ எடை கொண்டு பூட்டு. எங்கும் காணக்கிடைக்காத இந்த அரிய பூட்டை சிலர் 8 லட்சம் ரூபாய் வரைக்கு விலைக்கு கேட்டதாக கூறுகிறார் அவர்.பழங்கால 100 ரூபாய் நாணயம், ஆயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளையும் கணேசன் சேகரித்து வைத்துள்ளார். முன்னோர்கள் பயன்படுத்திய அரிய பழங்கால பொருட்களை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவற்றை போற்றி பாதுகாப்பதாக கூறுகிறார் கணேசன்.