அன்புமணியின் நடைப்பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ராமதாஸின் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த திருப்போரூரில் "உரிமை மீட்க, தலைமுறைக் காக்க" என்ற பெயரில் அன்புமணி நேற்று மாலை (25.7.2025) நடைபயணத்தை தொடங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று அவருடன் நடைப்பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் பேசிய அன்புமணி, ராமதாஸின் கொள்கையை நிறைவேற்றவே இந்த நடைபயணத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, அன்புமணியின் நடைபயணத்தால் வடமாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என குற்றம்சாட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியின் நடைப்பயணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
இருதரப்பு மோதல் ஏற்படும் என்பதால் அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாமகவின் நிறுவனர், தலைவர் ராமதாஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவரது ஒப்புதல் இல்லாமல் யாரும் கட்சியின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது என்றும் டிஜிபி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, “அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்துக்கு தடை இல்லை. அவரது நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.