ராமதாஸ், அன்புமணி முகநூல்
தமிழ்நாடு

16 குற்றச்சாட்டுகள்.. பதிலளிக்காத அன்புமணி.. பாமகவிலிருந்து நீக்கம்.. ராமதாஸ் அதிரடி!

இரண்டாவது முறையாக காலஅவகாசம் அளித்தும் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத சூழலில், அவரை கட்சியிலிருந்து நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

Prakash J

இரண்டாவது முறையாக காலஅவகாசம் அளித்தும் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத சூழலில், அவரை கட்சியிலிருந்து நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

பாமகவில் தந்தை - மகன் இடையே நீடித்த மோதல்

ஒரு கட்சியால் தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. இடையில், போன் ஒட்டுக் கேட்பு விவகாரமும் பேசுபொருளானது. இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டது என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

அன்புமணி, ராமதாஸ்

தவிர, இக்கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழுவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நேரிலோ, கடிதம் வாயிலாகவோ பதில் அளிக்கலாம் என ராமதாஸ் தரப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதி கெடு விதித்தது. இல்லாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அன்புமணி எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி தைலாபுரத்தில் பாமக மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் பேசிய ராமதாஸ், “அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீஸுக்கு அவர் வருகிற 10ஆம் தேதிக்குள் (அதாவது நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அன்புமணி பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்

ஆனால், இரண்டாவது முறையாக காலஅவகாசம் அளித்தும் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத சூழலில், பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையின்படியும், கட்சி நிர்வாகக் குழுவின் முடிவின்படியும் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பாமகவின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால் அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராமதாஸ், பாமக நிறுவனர்
தேவைப்பட்டால் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம். அவர், தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது. அன்புமணி பேசுவதெல்லாம் பொய்.
ராமதாஸ், பாமக நிறுவனர்

அப்போது பேசிய அவர், ”பா.ம.க. செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார்” என அறிவித்தார். மேலும் அவர், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது. உரிய விளக்கம் அளிக்காததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகிவிட்டன. அன்புமணியின் செயல்கள் தலைமைக்குக் கட்டுப்படாத வகையில் உள்ளன. பாமகவின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால் அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி வளர்ச்சிக்குத் தடையாக இருந்த களையை நீக்கிவிட்டோம். அரசியல் தலைவராகச் செயல்பட அன்புமணி தகுதியற்றவர். தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறார். மூத்தவர்கள் கூறிய அறிவுரைகளை அன்புமணி கேட்கவில்லை. பாமக உறுப்பினர்கள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது. அன்புமணியுடன் இருப்பவர்கள் தனிக்கட்சியாகச் செயல்படுவது போல் உள்ளனர். அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்கத் தயார். தேவைப்பட்டால் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம். அவர், தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது. அன்புமணி பேசுவதெல்லாம் பொய். என்னையே உளவு பார்த்தவர் அவர். நான் உயிருள்ளவரை கோல் ஊன்றியாவது மக்களுக்காகப் போராடுவேன்” எனத் தெரிவித்தார்.