அன்புமணி ராமதாஸ் web
தமிழ்நாடு

’தலைவரானது முதல் நிம்மதி போய்விட்டது; இதனால்தான் மௌனமாக இருக்கிறேன்’ - அன்புமணி ராமதாஸ் பேச்சு

பாமகவின் தலைவர் பதவி ஏற்றத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என தருமபுரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

PT WEB

தருமபுரி மாவட்டத்தில் பாமக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்-க்கு பாமகவினர் பழங்களிலான 15 அடி நீளமுள்ள மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது‌.

தலைவரானதில் இருந்து நிம்மதி போய்விட்டது..

சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், தருமபுரி பாமகவின் கோட்டை. என் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்தாலும் தருமபுரி வந்தால் நீங்கி விடும். எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்து தருமபுரி. பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இங்கே தங்கி வேலை செய்தது. பல அனுபவங்கள். 2014 தேர்தலில் பண பலம், ஆளூங்கட்சியை மீறி வெற்றி பெற்றோம். எனது கடைசி காலம் வரை உங்களுக்கு கடமைப்பட்டவனாக இருப்பேன். ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது, உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் வருவேன். இங்கு வரும்போது சோர்வாக இருந்தாலும். உங்களை பார்த்ததும், தெம்பு வந்துவிடும்.

மருத்துவர் அய்யா வன்னியர் சங்கம் தொடங்கியது இந்த மண்ணில் தான். இந்த தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு நான் சென்றுள்ளேன். இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் எனக்கு தெரியும். அதற்கு தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று பேசினார்.

தலைவரானது முதல் என் நிம்மதி போய்விட்டது:அன்புமணி

மேலும், பாமக தலைவர் பதவியை ஏற்றதிலிருந்து என் நிம்மதி போய்விட்டது. 3 ஆண்டுகளாக உள்ள கடும் மன உளைச்சலை கடந்துதான் தருமபுரிக்கு வந்துள்ளேன். கடந்த இரண்டு மாதமாக இருக்கும் சூழல் எல்லோருக்கும் தெரியும். என் மீதான குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருக்கிறேன். நமது கட்சி, சமுதாய நலன் கருதியே அமைதியாக இருக்கிறேன். அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 சதவீதம் பொய்யானது. அது அனைவருக்கும் தெரியும். அய்யாவின் 45 ஆண்டு கால உழைப்பு. அவரைப் போல இனி யாரும் பிறக்க முடியாது.

பாமக சிறந்த கட்சி, நம்ம கட்சி உழைப்பு மிகுந்த கட்சி. நாம் கஷ்டப்பட்டுதான் உயரத்திற்கு செல்கிறோம். மற்ற கட்சிகள் லிப்டில் போறாங்க. கரண்ட் ஆப் ஆனால் அது நின்று விடும். இன்றைக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும், அவரிடம் இட ஒதுக்கீடு வேணும்னு கேட்கிறோம். ஆனால் நாம் ஆள வேண்டும். அதற்காக தான் இந்த நடைப்பயணம் செய்கிறேன். அய்யா பிறந்தநாளில் 100 நாள் நடைப்பயணம் ஆக செல்கிறேன், ஜூலை 25 திருப்போரூரில் முருகனை வணங்கி தொடங்குகிறேன். நவம்பர் 1-ம் தேதி தருமபுரியில் முடிக்கிறேன் என்று பேசினார்.

திமுகவிற்கு ஒரு ஓட்டுக்கூட போடக்கூடாது..

திமுக குறித்து பேசிய அன்புமணி, ஊழல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து உள்ளது. நாம் திமுகவை புறக்கணிக்க வேண்டும். திமுகவிற்கு ஒரு ஓட்டுக் கூட போடக்கூடாது‌. திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. இந்த சமுதாயத்தை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது.

சமுதாய நலன்கருதியே அமைதியாக இருக்கிறேன்: அன்புமணி

போராட்டம் நடத்திலாம்னு அய்யாவிடம் சொன்னேன். ஆனால் முதல்வர் கொடுப்பதாக உறுதியளித்தார். அதனால் போராட்டம் வேண்டாம்னு சொன்னார். இல்லையென்றால் நாம் போராட்டம் நடத்தியிருப்போம்‌. நம்மை ஏமாற்றிய இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். இந்த கொடுங்கோல் ஆட்சியை தூக்கியெறிய வேண்டும். திமுகவிற்கு நம்மை குழப்ப வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அது நடக்காது. பாமக நிச்சியம் வெற்றி பெறும். நமக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், இந்த பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களை, ஆறு மாதங்களில் நிறைவேற்றி இருப்போம் என்று பேசினார்.