பாமக சார்பில் அன்புமணி ராமதாசை மாநிலங்களவை வேட்பாளராக களமிறக்க அக்கட்சியின் உயர்நிலை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
அதன்படி மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான், மேட்டூர் நகர செயலாளர் எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.
அதிமுக கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை வேட்பாளராக களமிறங்குகிறார். அன்புமணி ராமதாசை மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்த பாமக உயர்நிலை கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.