திமுக அரசை விமர்சித்த அன்புமணி ராமதாஸ் web
தமிழ்நாடு

”திமுக அரசில் அனைத்துமே பூஜ்யம்; மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - அன்புமணி ராமதாஸ்

திமுக ஆட்சி ஒரு பூஜ்ய ஆட்சி என்றும், திமுக ஒன்றில் மட்டும் ஊழலில் மட்டுமே முதலிடம் என்றும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

PT WEB

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சி ஊழல், கொடுங்கோல், பெண்களுக்கு எதிரானது எனக் கூறி, தகுதி இல்லாதவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருக்கும் பட்சத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது.

மதுரை பொதுக்கூட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். மேலும், தமிழக பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பொதுக்கூட்ட மேடையில் கலந்துக் கொண்டாரகள்.

திமுக ஆட்சி ஒரு பூஜ்ய ஆட்சி

இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடம். சமூக நீதியை 100 அடி குழி தோண்டி ஆழமாக திமுக அரசு புதைத்துவிட்டது. தமிழக மக்கள் மு.க.ஸ்டாலினை மன்னிக்கமாட்டார்கள். இன்னும் இரு மாதங்களில் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று தொடக்கம் எழுதும் நாள். திமுக என்றாலே ஊழல் அரசு, கொடுங்கோல் அரசு, பெண்களுக்கு எதிரான அரசு, கஞ்சா ஆட்சி, சாராய ஆட்சி எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பூஜ்ய ஆட்சி. பூஜ்ஜிய அரசு.

MK Stalin

கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வந்த நீர் பாசன திட்டங்கள் பூஜ்யம். புதிய மாவட்டங்கள் பூஜ்யம், புதிய மருத்துவ கல்லூரிகள் பூஜ்யம், எம்பிபிஎஸ் இடங்கள் பூஜ்யம், கல்லூரி இணை பேராசிரியர்கள் நியமனம் பூஜ்யம், புதிய மின் திட்டங்கள் பூஜ்யம், இது ஒரு பூஜ்ய அரசு. தகுதி இல்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள், நேர்மை இல்லாத திமுக ஆட்சியை துரத்தி அடியுங்கள் விரட்டி அடியுங்கள். திமுக ஒன்றில் மட்டுமே ஊழலில் மட்டுமே முதலிடம், ஊழலின் மறு பெயர் திமுக என கடுமையாக விமர்சித்தார்.