Anbumani Ramadoss web
தமிழ்நாடு

கூடிய பாமக பொதுக்குழு.. மீண்டும் தலைவரான அன்புமணி!

அன்புமணி மீண்டும் பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்; M. மீரா

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது 88-ஆவது பிறந்தநாளையொட்டி தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், கட்சியின் முழுப் பொறுப்பையும் தலைவர் அன்புமணி ராமதாஸிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

Anbumani Ramadoss & Ramadoss

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கட்சியின் தலைமையையும் நிர்வாகப் பொறுப்புகளையும் மையமாகக் கொண்டு ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. ஆனால், ஜூன் 24ஆம் தேதி ராமதாஸ்–சரஸ்வதி திருமண நாளில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற சந்திப்பில், தந்தை-மகன் இருவரும் மனம் திறந்து பேசியதுடன், ஒருவரையொருவர் கட்டியணைத்து சமரசமானது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 25 அன்று நடைபெற்ற ராமதாஸின் 88-ஆவது பிறந்தநாள் விழாவில் இருவரும் இணைந்து 88 மரக்கன்றுகளை நட்டனர். அப்போது, ”இனி தாம் அரசியல் பேசப் போவதில்லை என்றும், அரசியலில் தலையிடப்போவதில்லை. இனி பாமகவை முழுமையாக அன்புமணி வழிநடத்துவார்" என ராமதாஸ் அறிவித்திருந்தார்.

Anbumani Ramadoss & Ramadoss

இதனைத் தொடர்ந்து இன்று ( ஜூலை 29) மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும், பாமக தலைவராக அன்புமணி ராமதாசும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.