திமுக அரசை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  pt web
தமிழ்நாடு

“வன்னியர்களும் பட்டியலின சமூகத்தினரும் சண்டையிட்டால் திமுகவுக்கு கொண்டாட்டம்” - அன்புமணி

வன்னியர்களுக்கு 58 ஆண்டுகளாக நடக்கும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வன்னியர்களுக்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை என அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார்.

PT WEB

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்கள் கடந்தும் திமுக அரசு உள் ஒதுக்கீடு வழங்கவில்லை என பாமகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ராமதாஸ், “வன்னியர்கள் என்றால் திமுகவிற்கு பிடிக்கவில்லை. வன்னியர்களுக்கு 58 ஆண்டுகளாக நடக்கும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும். தெலங்கானா, ஒரிசா, போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து விட்டது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது” என்றார்.

திமுக அரசை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இதேபோல், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “வன்னியர்களும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சண்டை போட்டுக் கொண்டால் திமுகவுக்குதான் கொண்டாட்டம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டினார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.