தன் மகள் வழி பேரன் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று தைலாபுரம் வீட்டில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் கருத்து மோதலில் ஈடுபட்ட ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அன்புமணி , ”இன்று தைலாபுரம் தோட்டத்தில் ஐயாவுடன் கட்சியின் வளர்ச்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தல், முழு நிலவு மாநாடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள் போன்றவை குறித்து குழுவாக விவாதித்தோம். வருகின்ற ஆண்டு எங்களுக்கு மிக முக்கியமான ஆண்டு.
இதில் எங்களுடைய செயல்திட்டங்கள், அடுக்கடுக்கான போராட்டங்கள், மக்கள் விரோத ஆட்சி அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களையெல்லாம் பொதுக்கூழுவில் நிறைவேற்றினோம். சாதி வாரி கணக்கெடுப்பு, 10.5 விழுக்காடு போன்ற செயல்திட்டங்களை ஐயாவின் திட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எங்களுடைய கட்சி ஜனநாயக கட்சி , இதில் நடக்கின்ற பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது என்பது எல்லா கட்சிகளிலும் நடக்கும் வழக்கமான ஒன்றுதான்.
எங்களுக்கு ஐயா ஐயாதான். எங்களுடைய கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து நீங்கள் பேசுவதற்கு அவசியம் இல்லை..அதை நாங்கள் பேசிக்கொள்வோம். " என்று தெரிவித்துள்ளார்.