தமிழ்நாடு

இளைஞர்களே அடுத்த ‘சமுதாயம்’ என்றால், எங்கள் உதயநிதியே அடுத்த ‘தமிழ்நாடு’ - அன்பில் மகேஷ்

webteam

இளைஞர்களே அடுத்த ‘சமுதாயம்’ என்று சொல்லும் போது, எங்கள் இளைஞரணி செயலாளரே அடுத்த ‘தமிழ்நாடு’ என்று எடுத்துக் கூறுவேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 308 மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், உபகரணங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, “திமுக என்பது கட்சி கிடையாது. இது மக்கள் ஒரு இயக்கம். எங்களை நாளும் இயக்குபவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை செய்வது அறிந்து செய்வது தான் இயக்கத்தின் பணி. 1949 - ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் அரசியலுக்கு வரவில்லை. 1957-இல் தேர்தலில் போட்டியிட்டு 17 எம்எல்ஏ பெற்றது. 

இந்த இயக்கத்தின் இளைஞர் அணியில் இரண்டு வெர்ஷன்கள் உள்ளது. முதல் வெர்ஷன் மு‌.க.ஸ்டாலின் தொடங்கினார். 1980 இல் இளைஞர் மன்றத்தை ஆரம்பித்து, 1987-ஆம் ஆண்டு இளைஞர் அணியில் பொறுப்பாளர்களில் ஒருவராக வந்தார். அதன் பிறகு இரண்டாவது வெர்ஷன் 2019 இல் தொடங்கியது. அப்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி பொறுப்புக்கு வந்தார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் உதயநிதி ஸ்டாலின். அப்போது கிடைத்த வெற்றி என்னுடையது அல்ல என்று கூறினார். இவர் பொறுப்புக்கு வருவதை வாரிசு அரசியல் சென்று கூறுகிறார்கள். ஆம் கடின உழைப்பில் கருணாநிதி போல செயல்படுகிறார் உதயநிதி. பள்ளி மாணவர்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர் உதயநிதி. பள்ளி மாணவர்களின் தேவையை செய்து கொடுப்பவர் உதயநிதி ஸ்டாலின். இளைஞர்களே அடுத்த சமுதாயம் என்று சொல்லும் போது, எங்கள் இளைஞரணி செயலாளரே அடுத்த தமிழ்நாடு என்று எடுத்துக்கூறும் நிகழ்வு இது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.

அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, “உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 13 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டோம். அது 20 நிகழ்ச்சிகளை அதிகரித்துவிட்டது. மழையின் போது தன்னை வருத்திக் கொண்டு பணியாற்றியவர்கள் தூய்மை பணியாளர்கள். அவர்களுக்கு அடுத்து வரும் நிகழ்ச்சியில் உதவி செய்யப்பட்ட உள்ளது. உயிரிழந்த விளையாட்டு வீராங்கனை பிரியா நினைவாக 16 அணிகள் பங்கேற்கும் கால்பந்து போட்டி திமுக சார்பில் நடத்தப்படும். இன்று பயனாளிகளாக வந்துள்ள மாணவர்கள், வரும் காலத்தில் நீங்கள் உதவி செய்யும் நிலைக்கு உயர வேண்டும்” என்று அமைச்சர் சேகர் பாபு பேசினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறியதாவது, “கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும். ஆனால் கல்வி மத்திய பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசும் மக்கள் மட்டும் பயனடையும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. புதிய கல்வி கொள்கை மூலமாக மத்திய அரசு 3 ஆண்டு பிஏ படிப்பை 4 ஆண்டாக மாற்ற முயல்கிறது. பள்ளி கல்வியில் மும்மொழி மத்திய அரசு கொண்டு வரப் பார்க்கிறது. இதற்கு எதிராக போராடும் ஒரே முதல்வர், மு.க‌.ஸ்டாலின்.

நமக்கு முதலில் தாய் மொழி. அடுத்து ஆங்கில மொழி. ஆங்கிலம் படித்தவர்கள் சிறந்த இடத்துக்கு சென்றுள்ளனர். பிற மொழிகளை வேண்டாம் என்று சொல்லவில்லை. தேவை என்றால் படிக்கலாம். ஆனால் பாஜக கூறுவது இந்தி மட்டும் போதும் என்கிறார்கள். ஆனால் நமக்கு ஆங்கிலம் வேண்டும். மாணவர்கள் வேலை பெற ஏதுவாக நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

பாஜக இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது. பாஜக இந்தி, மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மாணவர்கள் வெற்றி பெற்றால் தமிழ் வெற்றி பெறும். நான் பேசுவது புரிந்தால் திராவிட மாடல் பிடிக்கும். அதனை மாணவர்களாகிய நீங்கள் உள் வாங்கிக் கொள்வீர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில் திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.