ஆசிரியர்களை கைவிடமாட்டோம் என அன்பில் மகேஷ் உறுதி pt
தமிழ்நாடு

”ஆசிரியர்களை கைவிடமாட்டோம்; அவர்கள் என் குடும்பத்தினர் போன்றவர்கள்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களை கைவிடமாட்டோம் என்றும், அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும் விரைவில் முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து போராடி வருகின்றனர். 2009 ஜூன் 1க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் குறைந்த அடிப்படை ஊதியம் பெறுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், அதற்குப் பிறகும் மாற்றம் இல்லை. அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களை கைவிடமாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த 2009 ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள். இந்த ஆசிரியர்களுக்கு தான் ஊதிய முரண்பாடு இருப்பதாகவும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப்போராட்டம் ஒருவாரத்தை கடந்து நடந்துவருகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

தமிழ்நாட்டிலேயே பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு இரு வேறு வகையான ஊதியம் வழங்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 8370 ரூபாய் அடிப்படை ஊதியமாகவும், 2009 ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு 5200 ரூபாய் தான் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 3170 ஊதிய குறைவு என்ற இந்த வித்தியாசம் முதலில் சிறியதாக தெரிந்தாலும் 15 ஆண்டுகளை கடந்து பார்க்கும் பொழுது மிகப்பெரிய ஊதிய முரண்பாடாக மாறி இருக்கிறது என்ற குற்றச்சாட்டை இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் முன்வைக்கின்றனர்.

அதாவது ஏழாவது ஊதிய குழு உயர்வுக்குப் பிறகும் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20,600 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் 2009 ஜூன் முன்பாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் 35,400 ரூபாயாக இருக்கிறது. ஏறத்தாழ சுமார் 14,800 அடிப்படை ஊதியத்தில் இழப்பை சந்திக்கிறோம். இந்த முரண்பாடு தான் எங்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம்

நாட்டிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் 41,300 ரூபாய் என அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தசூழலில் தான் சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

கொடுத்த வாக்குறுதி என்ன?

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய நடைமுறை கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திவருகின்றனர். இது ஆசிரியர் தரப்பு நியாயம் என்றால் அதிகரித்துக் கொண்டே செல்லும் அரசு ஊழியர் ஊதியம் - ஓய்வூதிய சுமை அரசுக்கு பிரச்னையாக பார்க்கப்படுகிறது. முந்தைய காலகட்ட ஊதிய நடைமுறைகளை இனியும் தொடர முடியாது, மாநிலத்தின் நிதி நிலைமை அதை அனுமதிக்காது என்பது அரசு தரப்பு நியாயமாக இருக்கிறது.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

இதனூடாக ஒவ்வொரு தேர்தலின்போதும், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்போம் என்று ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் சொல்வதும் நடக்கிறது. அப்படித்தான் இடைநிலை ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கை நியாயமானது என்று கூறியதோடு, திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த ஊதிய முரண்பாடு களையப்படும் என்றும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 

இதன் பின்னணி காரணமாகத் தான் இடைநிலை ஆசிரியர்கள் ஒரு வாரம் கடந்தும் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தசூழலில் தான் ஆசிரியர்களை கைவிடமாட்டோம் என்றும், அவர்களின் போராட்டம் நியாயமானது, அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள், இன்று நடக்கவிருக்கும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.