‘ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்றுவது போல், பள்ளி மாணவர்களை பயமுறுத்தி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து வாங்குகிறார்கள்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சனம் செய்துள்ளார்.
திருச்செங்கோட்டில் தனியார் கல்வி நிறுவனத்தில் நடந்த மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவினர் பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குவதாக ராசிபுரத்தில் இருந்து மாணவிகளின் வீடியோ வெளி வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.
ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்றுவது போல், பாஜக மிஸ்டு கால் கொடுத்து கட்சியில் சேர வைப்பதை போன்றதன் தொடர்ச்சிதான் இது என்றும் அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார்.