சி.வி. சண்முகம் கூறியபடி திமுக கூட்டணிக்காக கையெழுத்து பெறப்படவில்லை, சட்டமன்ற குழுத் தலைவருக்காக மட்டுமே கையெழுத்து பெற்றோம் என அன்பழகன் கூறினார். விஜய் பலவீனமான முதலமைச்சர், குதிரைப்பேரம் மூலம் கட்சிகளை உடைக்க முயற்சி செய்கிறார் என கடுமையாக விமர்சித்தார்.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “கனத்த இதயத்தோடு நான் தற்போது நிற்கிறேன். சுயநலமிக்க சில சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள் மனவேதனையில் உள்ளனர். எஸ் பி வேலுமணி, C. V. சண்முகம் ஆகியோர் எங்கள் நண்பர்கள் தான். ஆனால் தற்போது நடப்பது வருத்தமளிக்கிறது என்று பேசினார்.
மேலும் சட்டப்பேரவையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “இதற்கு முன் ஒவ்வொரு முறையும் அதிமுக பொதுச்செயலாளர் தரப்பிலிருந்தே கடிதம் வழங்கப்படும். அதன் அடிப்படையில்தான் நடவடிக்கைகள் நடைபெறும்” என தெரிவித்தார்.
மேலும், “சி.வி.சண்முகம் கூறுவது போல திமுகவுடன் கூட்டணி அமைக்க கையெழுத்து பெறப்படவில்லை. சட்டமன்ற குழுத்தலைவர் தொடர்பாகத்தான் கையெழுத்து பெறப்பட்டது. V. K. Sasikala மற்றும் T. T. V. தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று வர வேண்டும், வேலுமணி கூறுவதில் தவறு இல்லை என்றும் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய்குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “விஜய் பலவீனமான முதலமைச்சர். அரசு பதவியில் ஜோதிடரை நியமித்து பின்னர் திரும்பப் பெறுகிறார். தனக்கு நம்பிக்கையானவரை வைத்துக்கொள்ள கூட அவருக்கு தைரியம் இல்லை.
தீய சக்தி திமுக என்றவர் தற்போது திமுக கூட்டணியில் உள்ளவர்களுடன் சேர்ந்து ஆட்சி செய்கிறார். புதிய ஆட்சியை அமைத்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி குதிரைப்பேரம் செய்து கட்சிகளை உடைக்க முயற்சிக்கிறார். தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.