கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை கண்டித்து குடவாசல் எம்ஜிஆர் கல்லூரி மாணவர்கள் நடத்திய சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழாதவாறு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, திருவாரூர் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், குடவாசல் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் வழக்குகளில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டத்தின்போது முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து குடவாசல் தாலுகா வட்டாட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது.