தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமிக்கு லண்டனில் உற்சாக வரவேற்பு

webteam

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக தொழில்துறையில் புதிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்து சென்று சேர்ந்த அவரை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். லண்டனில் தொழில்துறைப் பிரதிநிதிகளை சந்திக்கும் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சுகாதாரத் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 

3 நாட்கள் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் முதல்வர், அடுத்த மாதம் 2ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ நகர்களுக்கு சென்று அமெரிக்க முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார். 

மேலும் நியூயார்க்கில் அமெரிக்க வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து துபாய் செல்லும் முதலமைச்சர், செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 

2 வாரகால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்பவிருப்பதாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.