மேட்டூர் அருகே மேச்சேரியில் 62 வயது முதியவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மேட்டூர் அருகே மேச்சேரிக்கு உட்பட்ட சாத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன் மேச்சேரி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் காமனேரியிலிருந்து கோவிலூர் செல்லும் வழியில் வயதான நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கூறியிருந்தார். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ரத்தக் காயங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக கிடந்தார்.
கொலை செய்யப்பட்டவர் பாலசுப்ரமணியன் என்பதும், அவர் காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.