அமுதா ஐ.ஏ.எஸ்.
அமுதா ஐ.ஏ.எஸ். file image
தமிழ்நாடு

பல் பிடுங்கிய விவகாரம்.. விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமனம்

Prakash J

நெல்லை மாவட்டத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விசாரணை நடத்திய போலீசார், கைதிகளின் பற்களைப் பிடுங்கிய சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங், நெல்லை எஸ்.பி சரவணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆய்வாளர்கள் 3 பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பல் பிடுங்கியது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். இதனால் இப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்ற இளைஞர், கடந்த 5ஆம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஏ.எஸ்.பி. பல்வீர் சிங், கல்லால் தன் பற்களை உடைத்ததாகவும், இதை வெளியில் சொன்னால் உன்மீது பொய் வழக்கு போட்டு உன்னை உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியதாகவும், அதனாலேயே தாம் உண்மையைச் சொல்லவில்லை எனவும் கூறியிருந்தார்.

Balveer Singh, arunkumar

இந்த விஷயம் மேலும் பரபரப்பான நிலையில், தமிழக அரசு இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளரான அமுதா ஐ.ஏ.எஸ்ஸை நியமித்துள்ளது. மேலும், அவர், ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அரசு தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையினை ஏற்று. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங், இ.கா.ப., மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள பெ. அமுதா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.