தமிழ்நாடு

4 தொகுதிகள் இடைத்தேர்தல் - ‘பரிசுப்பெட்டகம்’ சின்னத்தையே ஒதுக்கக் கோரி அமமுக மனு

webteam

தமிழகத்தில் நடைபெற இருக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கக் கோரி அக்கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என அமமுக கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமமுக கோரிக்கையை நிராகரித்தது. ஆனால் ஏதேனும் ஒரு பொதுச்சின்னத்தை அமமுகவிற்கு வழங்க தேர்தல் ஆணையத்தை பரிந்துரை செய்தது. இதையடுத்து பரிசுப்பெட்டகம் சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டது. அந்த சின்னத்திலேயே அக்கட்சி மக்களவை மற்றும் 18 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்தித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பரிசுப் பெட்டகம் சின்னத்தை மீண்டும் ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் டிடிவி தினகரன் தரப்பு நாளை முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.