தமிழ்நாடு

இ.பி.எஸ் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் அமமுக பிரமுகர் கைது

webteam
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் மீது செருப்பு வீசிய வழக்கில் அமமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 5-ஆம் தேதி அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அ.தி.மு.க, அ.ம.மு.க.வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்த கார் மீது சிலர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த மாறன் என்பவர், தாக்குதல் சம்பவத்திற்கு அ.ம.மு.க-வினர் தான் காரணம் என குற்றஞ்சாட்டி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அ.ம.மு.க-வினர்  மீது அண்ணா சதுக்கம் போலீசார் 294(பி)- ஆபாசமாக திட்டுதல்,148-பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், 323- காயம் ஏற்படுத்துதல், 506(1)- மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் “உட்கட்சி பூசலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலை திசைதிருப்ப, அமமுகவினர் மீது அ.தி.மு.கவினர் வீண்பழி சுமத்துகிறது” எனக்கூறி இவ்விவகாரத்தில் காவல்துறை தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.ம.மு.க சில தினங்களுக்கு முன் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இவ்விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி லாக் நகரைச் சேர்ந்தவரும், அ.ம.மு.க 114வது வார்டு பொருளாளருமான மாரியப்பன் (38) என்பவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான மாரியப்பனை போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் தேடி வருவதாகவும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.